Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, August 4, 2015

பக்கத்து வீடு - சிறுகதை

சல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள். வெளியே சென்றுள்ள கணவனை நோன்பென்றும் பாராமல் மனதுக்குள் திட்டித் தீர்த்தாள். தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
-என்ன செய்ய… கையில ..மடியில இருந்தா.. நானும் இவங்களப் போல.. வீசி.. செலவழிச்சிருப்பேன். என்ன செய்ய.. எனக்கு வந்து வாய்ச்சது அப்படி.. இயலாமையுடன் நீண்ட பெருமூச்சு எட்டிப் பார்த்தது.
- சல்மாவுக்கு இப்போதுள்ள பாரிய பிரச்சினை… பக்கத்து வீடுதான். பக்கத்து வீட்டு சகீனா குடும்பத்தினர் நடுத்தர வர்க்கத்தை தாண்டி ஒருபடி மேலே நிற்பவர்கள் – பணம் மனம் திறந்து புழக்கத்திலிருந்தது.. பேச்சுக்கென்றாலும் பெருமை இல்லாதவர்கள்.
சல்மாவுக்கு அப்படியில்லை. எண்ணி.. எண்ணி செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை. பொருளாதாரம் கடுமையாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. சல்மாவின் கணவர் சமீர் மாத சம்பளமாக சிறிய வருமானத்தைப் பெறுபவர். இறை விசுவாசம் மிகுந்தவர். எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் – தான் உண்டு – தன் வேலையுண்டு என்று இருப்பார்.
சல்மாவின் திருமணம் அழகாகத்தான் நடைபெற்றது. மணமான புதிதில் பெற்றோரின் பொலிவு இவளிடத்தில் இருந்தது. காலப் போக்கில் மூன்று பிள்ளைகளுக்கு தாயாகி வனப்பு போய்—வறுமை வந்து ஒட்டிக் கொண்டது. அத்தோடு இயலாமை- பொறாமை – எரிச்சல் போன்ற குணங்களும் கூடிக் கொண்டே வந்தன.
இவளின் போக்கு இப்படி என்றாலும் – பக்கத்து வீட்டார்கள் இவளிடம் மிகவும் கண்ணியமாகவும் – அன்பாகவும் நடந்து கொண்டனர். நிறைய உதவிகள் –கொடுக்கல் என்று பரந்த மனதளவில் நடந்து கொண்டனர்.
அவர்கள் செய்யும் உதவிகள் இவளுக்கு ஒரு தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. ” என்னேட இயலாமையை சுட்டிக்காட்டுகின்றனரோ—” சந்தேகித்தாள்.
அவர்கள் இவளுக்கு கொடுக்கும் உயர்தர திண்பண்டங்களை ருசித்து- ருசித்து- சபித்தாள். பொறாமைப்பட்டாள். அவர்கள் வித விதமாக உடையணிந்து சென்று வருவதை கதவு இடையினால் பார்த்து பெருமூச்செறிவாள். ஒருவரது பெறுமானம் உடையிலும் – உணவுப் பண்டங்களிலும்தான் உள்ளதென்று நிர்ணயித்தாள். ஆனால் தன் வீட்டுப் பெறுமானம் அவளுக்குப் புரியவில்லை.
ரமழான் வரும்வரை காத்திருந்தாள். ரமழான் மாதத்தில் மாத்திரம் ஸதகா கொடுக்கும் பணக்காரர்களை நம்பியிருந்தாள்.
சகீனாவுக்கு நல்ல உயர்தர உணவுகளைக் கொடுத்து அசத்த வேண்டுமென்று எண்ணியிருந்தாள். ஆனால் ஏதோ…. இவளது போதாக்காலம் – கைகள் காய்ந்து போய்க் கிடந்தன.
”கணவன் சமீரிடம் கடுமையாக திட்டு வாங்கிக் கொண்டாள். விரலுக்குதக்க வீக்கம் வேண்டும்” என்றான்.
” அழகிய குணமுடையவர்களே உங்களில் சிறந்தவர்” என்று நபி (ஸல்) கூறவில்லையா---- எடுத்துரைத்தான்.
” மற்றவர்களைப் பார்த்து சும்மா சும்மா வயித்தெரிச்சல் படாம – வீட்டையும் பிள்ளைகளையும் ஒழுங்கா கவனி…” கடுகடுத்தான்.. என்றாலும் இவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
” ஒங்களுக்குத்தான் வெக்கம், மானம், சூடு – சொரண எதுவுமே இல்லையே… அவங்க தாரத… நல்லா… தின்னுறீங்க.. திருப்பிக் கொடுக்கணும் என்ற எண்ணமே--- இல்லையே— புலம்பினாள்.
யாருடி… இவ… ஒன்ற நல்லாப் புரிஞ்சிக்கோ… நமக்கு கிடைச்ச மாதிரி… பக்கத்து வீட்டு மனுஷங்கள் வேறு யாருக்கும் கிடைக்கமாட்டாங்க…. இருக்கிறத விட்டு விட்டு பறக்க நினைக்காம… யாருட மனமும் நோவாம… நடந்து கொள்ள பாரு – உபதேசித்தான்.
”எனக்கு அதெல்லாம் தெரியாது.. எப்படி சரி… எந்த வழியில சரி… அவங்களுக்கு நாமளும் கொடுத்து என்ட லெவல.. பெலன்ஸ் பண்ணனும்..”
”கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றன்.. இவ புடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு நிற்கிறா.. உன்ன மாதிரி பொம்பளைகளால்தான் பாதி கணவன்மாருங்க திசைமாறி போறாங்க… சே… ஞாயித்து கிழமை சரி … வீட்ட இருக்க.. முடியல..” கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாதவன் சேர்ட்டை மாட்டிக் கொண்டு – பள்ளியில போய் நிம்மதியாக இருக்கலாம். என்று மனம் நொந்தவாறே வெளியே சென்றான்.
பகல் இரண்டு மணிக்குப் போன சமீர் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பினான். கையில் ஏகப்பட்ட பார்சல்களைச் சுமந்த சொப்பிங் பேக்குகள்… வாயைப் பிளந்தபடி நின்றிருந்த சல்மாவிடம் பார்சல்களை ஒப்படைத்தவன் எதுவும் பேசாமல்… குளிப்பதற்காக குளியலறையை நோக்கிச் சென்றான்.
அவசர அவசரமாக அவற்றினைப் பிரித்து பார்த்தவள் இன்ப அதிர்ச்சியில் சிலையாகி போனாள். அவள் கனவு கண்ட வித விதமான உணவுப் பண்டங்கள்…. இனிப்பு வகைகள்…
சல்மாவின் மூளையில் மின்னலென ஒரு யோசனை… சட்டென ஒரு அழகான பெரிய பீங்கானை எடுத்தாள்…
அது அவளது திருமணத்துக்கு கிடைத்த ஆறு பீங்கான்களில் ஒன்று. அவசர அவசரமாக.. எல்லா உணவு வகைகளிலும் சிறிது சிறிதாக எடுத்து பீங்கான் நிறைய வைத்தவள்.. சகீனாவின் வீட்டுக்கு விரைந்தாள்.
வாசலில் ஓதிக்கொண்டிருந்த சகீனாவின் கணவர் இவளைக் கண்டு உள்ளே போய் மனைவிக்கு மெஸேஜ் கொடுக்க…. சகீனா முகம் மலர வாசலில் வந்து வரவேற்றாள்.. சல்மா முகத்தில் பெருமை பொங்க…
” பெரிசா.. ஒண்ணுமில்ல… இன்னிக்கு சன்டேதானே… எங்கட ஹஸ்பன் சொப்பிங் போனாரு… அப்படியே… பிள்ளைங்க.. விரும்பினத வாங்கிகிட்டு வந்தாரு.. அதுதான்.. உங்கள நெனவுக்கு வந்துச்சி.. இந்தாங்க… கொடுத்து விட்டு மின்னலென மறைந்தாள்.
அப்போதுதான் --- குளித்து விட்டு தலையைத் துவட்டியவாறே வந்த சமீர்…
” என்ன எல்லாம் பிரிச்சி பாத்தியா…
”ஓ பார்த்தேனே.. கல்யாணத்துக்கு பிறகு இன்னிக்குத்தான் உருப்படியான ஒரு வேல செஞ்சிருக்கீங்க….”
”நல்ல.. கத.. நான் எப்படி .. இவ்வளவு ஆயிரக்கணக்கில கொடுத்து வாங்குறது… உன்னோட கரகரப்பு தாங்க ஏலாம .. பள்ளியில போய்.. யோசனையுடன் இருந்தேனா.. அப்போ பள்ளிக்கு வந்த சகினாட ஹஸ்பன் என்ட முகத்தைப் பாத்திட்டு கொஞ்சம் இங்கேயே இருங்க என்றவர் திரும்பி வாரப்போ இதெல்லாம் கொண்டு வந்து அன்பா தந்தாரு.. பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான். இப்படி புரிந்துணர்வுள்ள பக்கத்து வீடு கிடைக்க நாம.. என்ன நல்லது பண்ணினோமோ.. யாஅல்லாஹ்.. அவன் சொல்லிக் கொண்டே போக.. சல்மா விக்கித்து வாயடைத்து கூனிக் குறுகி நின்றாள்.
- பாத்திமா நளீரா - வீரகேசரி ஞாயிறு வாரவெளியீடு - 12/July/2015

Wednesday, July 1, 2015

நானும் எனது பேனாவும்










எனது  பேனா
நடந்து  வந்தது….
மலர்கள்   மீதல்ல…
முட்களின்  கற்களின்..
முற்றுகையில்..
உதித்து  வந்தது.
  ---------------
எனது..
கவிதைகள்  சிறகு
கட்டிப்பறந்தவையல்ல…
காலத்தின்
அடிச்சுவட்டில்
அத்தாட்சிப்பெற்றவை.
  ---------------
பிரிக்கப்பட்ட
யுகத்திலிருந்து..
புதைக்கப்பட்ட
மடைமைகளுக்கு—கொடியேற்றம்
செய்யும் -- எனது
பேனாவின்--எண்ணங்கள்
காதலால்…
அலங்கரிக்கப்பட்டவையல்ல.
அனுபவக்  கோர்வைகளால்
ஜனனமானவை.
   -----------
எனது—பேனாவின்
மொழிகளில்---போலி
ஒப்பனையில்லாத..
போராட்டம்--
சத்தமில்லாமல்
சத்தியாக்கிரகம் பண்ணும்.
   -----------
இரவின்  இதயத்தில்
நீண்ட  பொழுதினைக்
கொண்டிருக்கும்..
என்  பேனா
பகலின்  பள்ளியெழுச்சில்
சமுதாயப் பயணத்தில்
சங்கமமாகும்.
   ------------

எனது பேனாவின்
சிந்தனையைத்
தட்டிக்கொடுக்கும்
எனது  விரல்கள்
விடியலின்  விரல்கள்.

பாத்திமா நளீரா – வீரகேசரி வார வெளியீடு -  June 28th 2015

உயர்வு












எனது

வீழ்ச்சியின் விதையை
நீ...
ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போதே..
நாான்--
மரமாக..செழித்து
வளா்ந்து விட்டேன்.

பாத்திமா நளீரா--

மனித நேயம்













வானிலிருந்து
ஒற்றைச் சிறகுடன்

மண்ணில் வீழ்ந்த
என்னை.....
மனிதப் பறவைகள்
பந்தாட...
என் இதயமோ
துடிதுடித்தது.
என்னைக் கூறுபோட்டு
கொன்றதற்காக...அல்ல
வானிலிருந்த பறவைகள்...
என்--
மற்றைய சிறகுடன்
வட்டமிட்டு
கதறிக் கொண்டிருந்தன.

----பாத்திமா நளீரா------

வேதம் ஓதும் சாத்தான்கள்


















புத்தரின் போதனையில்
இப்படிப்பட்ட சாத்தான்களா
பிறக்க வேண்டும்...?

வேதம்--ஓதுவதற்காக
இரத்தத்தை..உறிஞ்சுகிறாா்களே...
அகிம்சை ஆடைக்குள்
அரிவாள்
சாமரம் வீசுகின்றதா...
குட்டக்குட்டக்
குனிந்ததால்....தலைகளுடன்
கால்களையும் பிடுங்கியவா்கள்
எம்மவா்களின்
விலாசங்களையும்---நெருப்பினால்
கழுவிவிட்டாா்களோ....
எளியவா்களின்--வம்சாவளியை
எாித்துண்ணும்----இந்த
இனவெறியா்களின்--உக்கிரத்திற்கு
ஊடகங்களும் ஊமையாகி விட்டனவா...



------------பாத்திமா நளீரா------

வெயில்














சூாியனின்
சூடு தாங்காமல்

வானம்

சூாியனை---பூமிக்கு

எாிந்து விட்டதோ....

வெயிலின்---நாக்கு
மனிதா்களை...
நன்றாகத்தான்...ருசிக்கிறது.


-பாத்திமா நளீரா

அன்னையா் ..தினத்திற்காக...









எனது
நிழலுக்காக...உன்
நிஜத்தை....தொலைத்தவள்
அல்லவா..நீ..

நான்..

கரையேற...நீ
கறைபடிந்து போனாயே...உன்
மனம் நொந்தால்..
மாளிகைகூட
மண்ணறை ஆகிவிடாதா..என்
கனவுகளை உன்
கண்களில் சுமந்த தாயே...
உன்...
பாதத்தின் கீழ்
சுவா்க்கமா...நீ
கருவறையிலேயே...சுவா்க்கத்தை
தந்து விட்டாயே...
- பாத்திமா நளீரா

வானம்















வானம் 
உலகைப் பாா்த்தது.
இயற்கையெல்லாம் 
பெரும்பான்மையாகத் தொிய...
மக்கள் மாத்திரம்
சிறுபான்மையாக இருக்கின்றனரே...

நான்...
துப்பினால்கூட
இவா்கள்
தாங்க மாட்டாா்களோ..?
வானம் சிாித்தது.
- பாத்திமா நளீரா 

Tuesday, March 24, 2015

முற்றுப்புள்ளி - பாத்திமா நளீரா











உலகத்திலேயே...
சிறந்த மொழி

அம்மா என்றேன்.
தாய்மை சிரித்தது
உலகை வென்ற
மொழியும் அதுதான்
என்றது.
-----------
மகிழ்ச்சியின் வடிவம்
உலகம் என்றேன்
உலகம் சொன்னது
நானே....
அழிந்து கொண்டிருக்கிறேன்
என்றது.
-----------
இயற்கையின் காதலில்
இதயத்தைக் கேட்டேன்
மனிதர்கள்
விற்று விட்டார்கள்
என்றது.
------------
அடிவானத்திடம் சூரியனை
சிறை பிடிப்பேன்
என்றேன்
வானம் சிரித்தது
முடிந்தால்....
ஒரு மழைத் துளியை
பிடித்துப்பார்
என்றது.
---------------
மூப்பு
வயதின் கௌரவம்
என்றேன்
முதுமை அழுதது
பிறப்பின் ஆரம்பசாபம்
என்றது.
-------------
அழிவின் முகம்
எதுவென்று கேட்டேன்
யுத்தத்தின் நாக்கு
என்றது
------------
இறுதியில்...
மரணத்தை ஓவியமாக
வரைய வேண்டுமென்று
விதியிடம் கேட்டேன்
'நான் மிதிக்கும் போது
நீ இருக்க மாட்டாய்'
என்று—எனக்கு
முற்றுப்புள்ளி வைத்தது.

- பாத்திமா நளீரா 

Sunday, March 1, 2015

கல்வித்துறையில் முஸ்லிம் இளைஞர்கள்! - பாத்திமா நளீரா

மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதத் தன்மையுடையவனாக, சிறந்த அறிவு ஞானமுடையவனாகத் திகழ்வதற்கும் கல்வி என்ற சாதனம் இன்றியமையாதது. கல்வி இருசாராரும் கட்டாயமாக கற்க வேண்டிய அரும்பெரும் பொக்கிஷம். எதிர்கால திட்டமிடல், பொருளாதாரம், தூரநோக்கு, சிந்தனை, சந்ததிவழிகாட்டல் என்று நமக்கும் சமுதாயத்திற்கும் ஒரு பாலமாக அமைந்து விடுகிறது. சமுதாயத்தின் அடித்தளமாகவும் குடும்பத்தின் ஆணிவேராகவும் இந்தக் கல்வி அமைகிறது என்றால் அது மிகையாகாது. அறிவை விட அதிக பயனுள்ள புதையல் வேறு எதுவும் கிடையாது.

நாம் ஒரு மனிதனைப் பார்க்கும் போது கல்விதான் தெரிய வேண்டும். பணம் அல்ல. ஒரு சமதாயத்தை உற்று நோக்குமிடத்திலும் கல்வியின் மேன்மையே தெரிய வேண்டும். இஸ்லாம் கல்வியைப் பற்றி அதிகளவு வலியுறுத்தியுள்ளது. நாம் ஒரு சமுதாயத்தை உற்று நோக்கும் போது அங்கே கல்வியின் மேன்மை தெரிய வேண்டும். உயர்ச்சி பேசப்பட வேண்டும். ஆனால், இன்று நடப்பதென்ன?

உலகளாவிய ரீதியில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் எடுத்து நோக்கினால் என்ன தெரிகிறது? அறிவும் திறனும் 20 சத வீதம் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க 80 சத வீதமான கல்வி அறிவு, திறன், உழைப்பு மேற்குலகத்தவரின் கடின உழைப்பில் செழிப்பாக ஜொலிக்கிறது.

அவர்களுக்கு இயற்கை வளங்கள் குறைவு என்றாலும் அறிவு வளம் நன்றாக உள்ளது. அதனை அவர்கள் நல்ல முறையில் உபயோகித்து கொள்கிறார்கள். நாம் இன்னமும் மற்றவர்களை சார்ந்துதான் நிற்கிறோம். எதையும் செயற்படுத்த மற்றவர்களின் உதவி ஒத்தாசை தேவைப்படுகிறது. எம்மிடம் இரண்டு கைகள் உள்ளன என்பதை மறந்து விடுகிறோம். சமூகத்தின் கடமை என்ன என்பதை முஸ்லிம் சமூகம் மறந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்திலிருந்து எத்தனை அறிவுசார் நிபுணர்கள் வெளிவருகிறார்கள் என்று தலைநிமிர்ந்து சொல்ல முடியுமா? அதிகம் ஏன் இளைஞர் பருவத்தினரின் கல்வியறிவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்று கணிப்பிட்டுதான் பெருமையடிக்க முடியுமா? சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களே மிக குறைவு. அப்படி தோற்றினாலும் திறமைச் சித்தி என்பது (ஒரு சிலரைத் தவிர) சிதறிப் போகிறது. சில பெற்றோர்களும் ஆண் பிள்ளைகள் விடயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.. ஏன்? ஆண் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்வான். என றினைக்கின்றனர். இந்த “பிழைத்துக் கொள்வான்“ என்ற வார்த்தையில் எத்தனை “பிழைகள்“ எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன.

கொழும்பு வட்டார முஸ்லிம் ஆண் பிள்ளைகள் சாதாரண தரம் வரை செல்வது மிக குறைவாக இருப்பதுடன் சித்தியெய்தி உயர்தரம் வரை செல்பவர்கள் மிக மிக குறைவாகவே உள்ளனர். சிலர் சாதாரண தரம் வந்தாலும் பரீட்சை எழுதாமல் அதன் பின்வரும் காலகட்டங்களில் எங்கேயாவது கடைகளில், சிறிய வேலைத் தளங்களில் அல்லது பிஸினஸ் என்று அதுவும் இல்லாவிட்டால் வெளிநாடு செல்வது.. இப்படிதான் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கை வட்டம் சுழன்று கொண்டிருக்கிறது. ஐந்து பேரில் ஒருவர் நல்ல நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்குச் செல்கிறார். ஏனைய நால்வரோ உருப்படி இல்லாத வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர்.

டாக்டர் அப்துல் கலாம் கூறினார். “இளைஞர்களே கனவு காணுங்கள்“ என்று. நன்றாக தூங்கி வரும் கனவு அல்ல இது. கல்வியைப் பற்றி, உயர்வைப் பற்றி, உழைத்து முன்னேறும் இலட்சியத்தைப் பற்றியே அவர் இவ்வாறு சொன்னார். ஆனால், முஸ்லிம் சமூதாயத்தில் எத்தனை அப்துல் கலாம்கள் உருவாகி உள்ளனர்?

அறுபது சத வீதத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொழும்பின் சேரிப்புறங்களிலுயே வாழ்கின்றனர். அவர்களின் பெரும்பாலானோரின் ஒரு நாள் தலா வருமானம் மிக குறைந்ததாகவே உள்ளது. இங்கே பொருளாதாரத்தில் பாரிய தடைகள் ஏற்படுகின்றது. கல்வி என்ற கண்ணாடி உடைத்து நொறுக்கப்படுகிறது. கற்பதற்கு ஆர்வம் இருந்தாலும் வருமானம் பாரிய பிரச்சினையாக உள்ளது.

முஸ்லிம் சமூகத்தை உயர்த்தி எடுக்க முஸ்லிம் தனவான்களுக்கு போதிய கால அவகாசம் இருக்காது. அழகான மாடி வீட்டை திருப்பி திருப்பி திருத்தி அமைப்பார்கள். சொகுசு வாகனங்களோ ஏராளம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் முதல் தர பொருட்களைக் கொள்வனவு செய்வதில் முன்னணியில் நிற்பார்கள். மிக.. மிக ஆடம்பரமான வைபவங்களுக்கு பணத்தைக் குப்பையாக கொட்டுவார்கள். பெயருக்கும் பெருமைக்கும் உதவி செய்வது போல் விளம்பரம் கொடுப்பார்கள்.. இதனால்தான் முஸ்லிம் சமூகம் கேள்விக்குரிய சமூகமாகவும் கேலிக்குரிய சமூகமாகவும் இன்று மாறிவிட்டது.

இனி விடயத்துக்கு வருவோம். கல்வியால் கண்களைக் கழுவ வேண்டியவர்கள் வேறு பல விடயங்களில் தங்கள் கவனத்தை திசை திருப்புகின்றனர். உயர்வுக்கு சென்றடையக் கூடியவர்களின் முன்னேற்றப் பாதை திசை மாறி பயணிக்கிறது. வறுமை என்ற ஒரேயொரு காரணம் சீக்கிரம் இலகு வழியில் பணம் சம்பாதிக்க இளைஞர்களைத் தூண்டுகிறது. சில பெற்றோர்களும் தங்களது பிள்ளை எப்படியான உழைப்பில் ஈடுபடுகின்றான் என்பதனைக் கவனத்தில் கொள்வதில்லை. பணம் வந்தால் போதும் வயிற்றுப் பிரச்சினை, வீட்டின் பொருளாதார பிரச்சினை தீர்ந்தால் போதுமென்று நினைக்கின்றனர். இறுதியில் பிள்ளைகளை சிறையில் போய் பார்க்கும் அளவுக்கு அவலம் தலைதூக்குகிறது.

இந்த இளைஞர்கள் கல்வியை விட்டு விட்டு எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள்? அனுபவ பள்ளிக் கூடமாக இருக்க வேண்டிய பெற்றோர்கள் அனைத்து விதமான அனாச்சாரங்களையும் ஒரு தொகுப்பாக இருந்து ரசிக்கின்றனர். மறுமையில் எவ்வாறான கேள்வி கணக்குகள் கேட்கப்படும்? உயர்தரம் சென்று மேற்படிப்பை படித்து சிகரம் அடைய வேண்டியவர்கள் சிறைக்கூடங்களில் முகவரியை தொலைத்து விட்டு கேள்விக்குறியாக நிற்கின்றனர்.

நடைமுறையில் தோன்றும் மாற்றங்கள் என்ன என்பதனக் கூட அறிய முடியாத அளவுக்கு இவர்கள் பார்வை, சிந்தனை, எண்ணக் கோப்பு சுருங்கி உள்ளன. நடை, உடை, பாவனை, பண்பாடு, கலாசாரம் சீரழிகின்றன. முஸ்லிம் சமூகம் அறிவின் வித்தாக இருக்க வேண்டும். பிரச்சினையின் அங்கமாக இருக்கக்கூடாது. தீர்வின் அங்கமாக இருக்க வேண்டும்.

எனது பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் எனது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் எத்தனை பேரோ?

Thinakaran Vaaramanjari March – 01 - 2015

Tuesday, February 24, 2015

அதிகரிக்கும் விவாகரத்துகள்!

முஸ்லிம் சமூகத்திலுள்ள பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பருவ வயதை எட்டியவுடன் திருமணக் கவலையும் பொறுப்பாக ஒப்படைத்து விடவேண்டுமே என்ற மன உளைச்சலும் பாடாய்படுத்தி விடும். இது இயற்கையும் கடமையும்தான். சில பெற்றோர்கள் படிப்பைக் கூட இடைநிறுத்தி விட்டு மணமுடித்து கொடுத்து விடுவர். அவ்வளவு ஆவல். வேகம்.

ஆனால் மணமுடித்த கையோடு அதிவிரைவாக விவாகரத்து கோரப்படுவதுதான் கவலைக்குரிய விடயம். பெற்றவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் முன் விவாகரத்து நோட்டீஸ் பறக்கிறது.பெரும்பாலும் இன்றைய நாகரீக திருமணங்கள் இப்படித்தான் சென்று கொண்டிருக்கின்றன.

பருவமடைதல் மாத்திரமே திருமணத்துக்கான தகுதி என்று பெற்றோர்கள் தீர்மானிக்கின்றனர். வாழ்வின் அடித்தளம் எது என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும் முன்னரே விவாகரத்தில் புரிந்துணர்வு ஏற்படுகிறது.

வயதுக்கும் வாழ்கைக்கும் ஒருவேலியாக திருமணம் அங்கீகரிக்கப்பட்டாலும் இன்று நடப்பதென்ன? தொட்டேன் கவிழ்த்தேன் என்றாகிவிடுகிறது.

ஆணையோ பெண்ணையோ குற்றம் சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. இல்லறம் இரக்கத்தில் ஆரம்பிக்கிறது என்பார்கள். இரக்கம் ஒரு கவர்ச்சி மாயையாக பிரதிபலித்து கசப்புடன் இரு மனங்களும் திருமணம் என்ற பெறுமானத்தை இழந்து விடுகின்றது. பல இளவயது திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்தமைக்கு காரணம் மனமுதிர்ச்சியும் மணவாழ்வு பற்றிய அடிப்படையான அறிவு இன்மையேயாகும்.

தோழமை- பொறுமை-மன்னித்தல்- விட்டுக்கொடுத்தல்- நெகிழ்ச்சி- புகழ்தல்- குடும்பத்தவரை மதித்தல்- அன்பு கலந்த அக்கறை- சுதந்திரம்- விசுவாசம்- தவறு செய்யும் தன்மையை ஏற்றல்- வெளிப்படைத்தன்மை இவையெல்லாம் திருமண வாழ்வின் உளவியல் சார்பான தன்மைகள் மட்டுமல்ல இருமனங்களும் இணைந்த பின்னர் கட்டாயமாக இருக்கவேண்டிய பண்புகளாகும்.

இருவருக்கிடையே மனந்திறந்த உரையாடல் மிகக்குறைவு. பொருளாதாரமென்றால் ஆண் என்றும் சமைத்து துவைப்பது என்றால் பெண் என்றும் எண்ணி விடக்கூடாது. ஆண் சம்பாதித்தாலும் பெண்ணே குடும்பத்தை நிர்வகிப்பவள். பெண் என்ற அடித்தளம் சரியாக இல்லாவிட்டால் குடும்பம் ஆட்டம் காண தொடங்கிவிடும். குடும்பம் என்ற நிறுவனத்தை கட்டியெழுப்ப இருவருமே கடுமையாக வாழ்க்கையில் உழைக்க வேண்டும்.

இடையில் வரும் கசப்புக்கள் முரண்பாடுகள் பிணக்குகளை ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொள்ளக் கூடாது. இதுவே பிரிவுக்கு வழிவகுத்து விடும்.

இன்றைக்கு எமது இலங்கையின் மேல் மாகாணமான கொழும்பில் அதிகளவு விவாகரத்துக்கள் எம் சமூகத்திடையே ஏற்படுகிறது. அடுத்ததாக கிழக்கு மாகாணமாகும்; .18-23 வயதுக்கிடையில் அதிகளவு விவாகரத்துக்கள் இடம்பெறுவதாகவும் 60 சத வீதமான திருமணங்கள் 3 வருடத்தில் முறிந்து விடுவதாக அறியப்படுகிறது.

இவ்வாறு திருமணம் செய்தவர்களில் அதிகமானோர் காதலித்து மண முடித்தவர்களென்றும் அப்படிப்பட்ட திருமணங்களே அதிகமாக முறிவு ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது. திருமணத்திற்கு பிந்திய அன்பே யதார்த்தமானது. தூய்மையானது. கண்டிப்பாக அவசியமானது. இந்தக் காதலை ஒரு நோய் எதிர்ப்புசக்தி என்று உளவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.

“நீ எந்தக் குடும்பத்தில் பிறந்தாய் என்பது முக்கியமல்ல. எப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கப் போகிறாய் என்பதே முக்கியமானது”.

- பாத்திமா நளீரா
Thinakaran Vaaramanjeri Feb-22-2015

Monday, February 23, 2015

உன் உளவியல்..

உளவியல் ஒரு பரந்த நோக்குள்ள எல்லைப் பரப்பைச் சார்ந்ததாகும். இதில் பல நோக்குகள், தீர்வுகள் என்பன அடங்கியிருக்கும் அதேவேளை, தனிமனித வாழ்வை மேம்படுத்துவதற்கும் சமூக வாழ்வை நெறிப்படுத்துவதற்கும் உளவியல் அறிவு இன்றியமையாததாக இருக்கிறது.

இன்று மனிதனானவன் அளவுக்கு அதிகமான தன்முனைப்பு, கோபம், பொறாமை, யதார்த்தத்தை மீறிய இலட்சியவாதம் கொண்டவனாக இருக்கிறான். ஏதோ ஒரு வகையில் கோபம், பயம், பதற்றம் மனதுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து உளச் சிதைவுக்கு ஆளாகி தொடர் மன உளைச்சலையும் எதிர்நோக்குகிறான். இங்கே உளவியல் நோய் என்று ஒன்று உருவாகிறது.

ஏதோ ஒரு பாதிப்பை மனிதனானவன், ஏதோ ஒரு வகையில் உணர்ந்தவனாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறான். உடம்புக்கு மருந்து எடுத்து சிகிச்சை செய்வதனை விட உள்ளத்துக்குச் சிகிச்சை செய்யவே விரும்புகிறான்.

அண்மையில் அமெரிக்காவின் மருத்துவ உலக ஆராய்ச்சி ஒன்றில் 75 சத வீதமானவர்கள் மருத்துவர்களிடம் தங்களது உடல் நோய்களை விட உள ரீதியான பாதிப்புகளையும் மனரீதியான உபாதைகளையும் எடுத்தியம்பும் மன உளைச்சல் பெற்றவர்களாகவே இருந்தனர் என்று கண்டு பிடித்துள்ளனர்.

உளவியல் சம்பந்தப்பட்ட விடயமானது மனிதனது அன்றாட நடைமுறை வாழ்வின் வட்டத்தில் வரும் கல்வி, தொழில், பொருளாதாரம், குடும்பம் என்பனவற்றை சார்ந்து நிற்கின்றது. மனிதன் தன்னை சுயஅடையாளம் அறிய முயற்சிக்கும் அதேவேளை, நடைமுறையில் தோன்றும் மாற்றங்களை கிரகித்துக் கொண்டு உள்வாங்க எத்தனிக்கிறான். தனது சக்திக்கு மீறிய எண்ணங்களுடன் போராட விரும்புகிறான். ஒரு நாளைக்கு ஒருவனுக்கு தோன்றும் எண்ணங்கள் சாதாரணமானவை அல்ல. 60,000 தொடக்கம் 90.000 வரை நீடிக்கிறது.

அளவுக்கு மீறிய எண்ணப் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து போராடி, தொய்வு பெற்று தளர்ந்து போகையில் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு வைத்தியரை நாட வேண்டியுள்ளது. தன் மனதின் ஆழத் தோன்றல்களை வெளிப்பாடாக கொண்டு வர முயற்சிக்கும் போது மனவெழுச்சியின் நடத்தையில் பிறழ்வு ஏற்படுகிறது.

ஒருவனின் வாழ்க்கை தொடர்பாடலுடன் உளவியல் பரிமாணங்கள் எந்தளவு தேவைப்படுகிறது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். உளவியல் உடல் சார்ந்த அங்கம். எவரும் விமர்சிக்கவோ புள்ளிக் கணக்கிடவோ முடியாது.

அதன் உறுதிப்பாடும் தளர்வான போக்கும் எண்ணங்களின் நடத்தையிலேயே உள்ளன. உளவியலில் எல்லாவற்றுக்கும் ஒரு காரணி உள்ளது. உதாரணமாக, கோபத்துக்கு சில காரணிகளை எடுத்துக் கொண்டால் ஒருவன் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது யாரோ கல்லால் எறிந்தால் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். அதுவே ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவன் கல்லை எறிந்தால் யாரோ ஒரு பைத்தியக்காரன் என்று ஆளை விட்டால் போதும் என்ற எண்ணம் விரைவாகச் செயற்படுவதுடன் முன்னைய கோபம் சமாதானமாக மேற்கொள்ளப்படுகிறது.

ஆகவே, எந்த விடயம் என்றாலும் எண்ணத்தில் ஒரு தீர்வையும் உளவியலில் ஒரு சாந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு அல்குர்ஆனுடன் நெருக்கமுடையவர்களுக்கு பயனளிக்கிறது.

- பாத்திமா
விடிவெள்ளி - 18/02/2015